நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது.

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், அவை குறித்து இன்றும், நாளையும் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தற்போது 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டியை, 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, 28 சதவீதம் வரி வரம்புக்குள் இருந்த பொருட்கள், 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல், 12 சதவீத வரி வரம்புக்குள் இருந்த பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், அனைத்து உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களையும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிமென்ட் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவிமாக குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. 

மேலும், தனிநபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜி.எஸ்.டி.யை பூஜ்ஜியம் ஆக்குவதற்கான முக்கியப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், டிவி, ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தும் 18 சதவீதம் வரிவரம்புக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறியரக கார்களுக்கான வரி 18 சதவீதமாகவும், பெரிய ரக கார்களுக்கு செஸ் வரியுடன் சேர்த்து 40 சதவிதமாகவும் மாற்றியமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. மேலும் வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Night
Day