மாணவர்களை மசாஜ் செய்ய விட்ட ஆசிரியை பணியிடமாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தூங்கி கொண்டிருந்த தலைமை ஆசிரியையின் கால்களை பள்ளி மாணவர்கள் பிடித்து விடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய தலைமை ஆசிரியரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்...

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தொடக்கப் பள்ளியில் மாவேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் கலைவாணி, பள்ளி நேரத்தில் வகுப்பறையில் உள்ள மேசையின் மீது படுத்து கொண்டு மாணவ மாணவிகளை கட்டாயப்படுத்தி கை கால்களை அமுக்கி விட கூறியதாக தெரிகிறது. 

ஆசிரியை கலைவாணி தினமும் இது போன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறகூடாது என சிறுவர்களை  மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வகுப்பறையின் மேசையில் படுத்து கொண்டிருந்த தலைமை ஆசிரியையின் கை கால்களை மாணவர்கள் அமுக்கிவிட்டு பணிவிடை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதுகுறித்து அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியையின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்து ஆசிரியை கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தலைமை ஆசிரியை கலைவாணியை அப்பியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியையின் இந்த செயலுக்கு அவரை பணியிடை நீக்கம் செய்யாமல் பணியிட மாறுதல் செய்திருப்பது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறி எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொடுக்கும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களே சில முறையற்ற செயல்களை செய்வது வேதனைக்குரிய ஒன்றாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Night
Day