எழுத்தின் அளவு: அ+ அ- அ
குஜராத் பயணத்தின் 2ம் நாளான இன்று காந்திநகரில் நடைபெற்ற பிரம்மாண்ட சாலை பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சாலையின் இருபுறமும் தேசிய கொடிகளுடன் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
82 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளச்சி திட்டங்களை துவங்கி வைக்க இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். முதல் நாளான நேற்று வதோதராவில் நடைபெற்ற சாலை பேரணியில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து தஹோத் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் உற்பத்தி சாலையை பிரதமர் மோடி துவங்கி வைத்து, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில், தமது குஜராத் பயணத்தின் 2ம் நாளான இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற சாலை பேரணியில் கலந்து கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் தேசிய கொடியுடன் திரண்டிருந்த ஏராமானோர் மலர்களை தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
சாலைப் பேரணியைத் தொடர்ந்து, காந்திநகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை 3 முறை இந்தியா போரில் தோற்கடித்திருப்பதாக கூறினார். இந்த முறை ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் வெறும் 22 நிமிடங்களுக்குள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கமான நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டதாக கூறினார். யாரும் ஆதாரம் கேட்காதபடி அனைத்து நடவடிக்கைகளும் கேமராக்கள் முன் நடத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்தியா யாருடனும் பகைமை பாராட்ட விரும்பவில்லை என்றும், அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஜப்பானை முந்தி 4வது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறி இருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.