எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அருவிப்பகுதியிலும், அருவிக்கு நீர்வரத்து வரும் பகுதியிலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அதிகாரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-ஆவது நாளாக இன்றும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. அருவியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-ஆவது நாளாக இன்று அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக் கோட்டம், திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறையின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படுகின்ற சின்னக்கல்லாரில் பெய்த 234 மில்லிமீட்டர் கனமழையால் நீர் வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணமாக சின்னகல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.