கவனிக்க வைக்கும் சிபிஎம் தேர்தல் வாக்குறுதிகள், முக்கிய அம்சங்கள் என்னென்ன!

எழுத்தின் அளவு: அ+ அ-

சூடு பிடிக்கும் மக்களவை பிரச்சார களத்தில் வெற்றியின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகளால் பாராட்டப்படும் அளவுக்கு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்..

2024 மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், நிலோத்பால் பாசு ஆகியோர் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 44 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக,
விவசாயிகள் பயிர்விக்கும் அனைத்து விலைப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும், வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடி மக்களுக்கான ஓய்வூதியம் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் மற்றும் பிற அரசியல் அமைப்பு நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சி பாதுகாக்கப்படும் எனவும், PMLA சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க அமலாக்கத்துறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து மரண தண்டனை நீக்கப்படும் எனவும், குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியால் நாட்டில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களை தாக்கக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் பாஜக அரசால் மாற்றப்பட்ட "திட்டக்குழு" மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும், ஜி.எஸ்.டி வருவாயில் கிடைக்கப்பெறும் தொகையில் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு உரிய முறையில் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

உயிர்காப்பு, மருத்துவம் மற்றும் புது காப்பீடு உள்ளிட்டவற்றிற்கான ஜிஎஸ்டி நீக்கப்படும் எனவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சிறப்பு பிரிவு மீண்டும் வழங்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு தனி நபர்களுக்கும் 10 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் எனவும், அதில் 5 கிலோ இலவசமாகவும் 5 கிலோ மானியத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு இன்றி ஆண்டுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்கள் மானிய முறையில் வழங்கப்படும் எனவும், நாட்டில் விலைவாசி உயராமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தம் செய்வது, இரு நாட்டு உறவு, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்த பாகிஸ்தான் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய அதிகாரப் பகிர்வுக்காக இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனவும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும், நிலம் இல்லாத தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின சமுதாய மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவது நிறுத்தப்படும் எனவும், இந்தி திணிப்பு தடுக்கப்பட்டு, அரசியலமைப்பில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வேறு அரசு பதவிகள் மற்றும் ஆளுநர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்படும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நிதிஉதவி வழங்குவது தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகள் VVPAT உடன் கணக்கிடப்படும் எனவும், வேட்பாளர்களைப் போல அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் பொதுவெளியில் கொண்டுவரப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இப்படியான பல்வேறு வாக்குறுதிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களுக்கான திட்டங்களை விட, மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என எதிர்க்கட்சிகளால் அதிகம் எதிர்க்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நீக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதானமாக முன்வைத்து வெளியிடப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் தற்போது கவனிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக சிறப்பு செய்தியாளர் யோகேஸ்வரன்

Night
Day