எழுத்தின் அளவு: அ+ அ- அ
இனக் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார். அங்கு 7 ஆயிரத்து 300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி - மைத்தேயி மக்கள் இடையே கடந்த 2023 மே மாதத்தில் மோதல் ஏற்பட்டது. இம்பால் போன்ற சமதளப் பகுதிகளில் வசிக்கும் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்தனர். பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், இனக் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்கிறார்.
அங்கு இனக் கலவரத்தால் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து பிரதமர் உரையாடுகிறார். இதனைத் தொடர்ந்து 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுக் கூட்டத்தில் உரையாடுகிறார். பின்னர் இம்பால் சென்று ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதேபோல் மிசோரம், அசாம், மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் செல்லும் பிரதமர் மோடி, 71 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.