'காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களிடம் கவனத்துடன் பேச வேண்டும்' - காங்கிரஸ் தலைமை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்திய மக்களை பல்வேறு நாட்டு மக்களின் நிறங்கள் மற்றும் உருவங்களோடு ஒப்பிட்டு பேசியது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தான் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா.... இவர் எது பேசினாலும் அது சர்ச்சை தான். இவர் கூறும் கருத்துகள் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே சர்ச்சையாக மாறி பேசுபொருளாகும். 

அண்மையில் சொத்துரிமை என்பதை மையமிட்டு சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து, மக்களவைத் தேர்தல் மேடைகளில் பாஜகவால் பெரும் விவாதமாக எழுப்பப்பட்டது. நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உள்ளது என்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்தையும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் முடிச்சிட்டு பாஜக அண்மையில் காங்கிரஸாரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

தற்போது மற்றொரு கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சை வலைளத்திற்குள் சிக்கியுள்ளார் சாம் பிட்ரோடா. பிரபல தொழிலதிபரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சாம் பிட்ரோடா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம் என்றும், நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தென்இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சாம் பிட்ரோடா. 

இப்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை நம்மால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாம் பிட்ரோடாவின் இந்தப் பேச்சின் வீடியோ, சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு, விவாதப் பொருளானது.

சாம் பிட்ரோடாவின் கருத்து பாஜகவின் காதுகளுக்கு எட்ட, பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, சாம் பிட்ரோடா கூறிய கருத்தால் தான் மிகுந்த கோபத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா... மக்களை இப்படிக் கேவலமாகப் பார்க்க, அனுமதித்தது யார்... என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

நல்ல நற்பெயர்கொண்ட, பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் ஏன் அவ்வளவு முயற்சி செய்தது என்பதை சாம் பிட்ரோடா மூலம் தெரிந்துகொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

சாம் பிட்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்கும் வகையிலான சாம் பிட்ரோடாவின் கருத்துகள், மிகவும் துரதிஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார். 

மொத்தத்தில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் இதுபோன்ற கருத்துகள் பாஜகவுக்கு வலுசேர்ப்பதுடன், மக்களின் சிந்தனைகளில் மாற்றங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Night
Day