"அரசியலமைப்பை அழிக்க விடமாட்டோம்..." - யாத்திரை நிறைவில் ராகுல் காந்தி உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாத்மா காந்தியை கொலை செய்த சக்திகள், இந்திய அரசியலமைப்பை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் யாத்திரையை மேற்கொண்டார். கடந்த 17ஆம் தேதி தொடங்கிய யாத்திரை மூலம் ராகுல் காந்தி பீகாரில் உள்ள 25 மாவட்டங்களில் 110க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுகளை உள்ளடக்கி ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த யாத்திரை பாட்னாவில் இன்றுடன் நிறைவடைவதையொட்டி பாட்னாவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 

இதில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.ஜே.டி., தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு என்பது நமது உரிமைகள், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி, ஜனநாயகம் ஆகியவற்றை பறிப்பதாகும் என குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்டபோது, இந்திய தேர்தல் ஆணையம் தங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் வீடியோ பதிவுகளை வழங்கவில்லை என்றும் ராகுல் காந்தி சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தியைக் கொலை செய்த சக்திகள், அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தியின் அரசியலமைப்பை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். அவர்கள் இந்திய அரசியலமைப்பை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்த ராகுல்காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரையின் போது தங்களுக்கு மக்களிடம் நிறைய ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறினார். 

தொடர்ந்து யாத்திரை மேற்கொண்ட போது, வாக்கு திருடனே அரியணையை விட்டு வெளியேறு என்ற புதிய முழக்கம், சீனாவிலும், அமெரிக்காவில் உள்ள மக்களிடம் எதிரொலிக்க துவங்கி இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Night
Day