61 அடி உயர லிங்கத்திருமேனி... அருவி போல் கொட்டிய பால்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மகா சிவராத்திரி நாளில் தமிழகத்திலேயே மிக உயரமான சிவ லிங்கத்திற்கு 108 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. எங்கே உள்ளது மிக உயரமான சிவலிங்கம்.. இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

மாசிமாத சிறப்புகளின் மகுடமாக விளங்குவது மகாசிவராத்திரியாகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மகா சிவராத்திரியின்போது விரதம் இருந்து சிவபெருமானை மனமுருகி வழிபட்டால் அனைத்து செல்வங்களும் தடையின்றி கிடைக்‍கும் என்பது பக்‍தர்களின் நம்பிக்‍கை. மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதும்  சிவன் கோவில்களில் பகலில் மட்டுமின்றி இரவிலும் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அந்த வகையில் மகா சிவராத்திரியையொட்டி திருச்சி மாவட்டம்  திருவெறும்பூரை அடுத்துள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற மஹாகாளீஸ்வரி ஆலயத்தில் 61அடி உயர சிவலிங்கத் திருமேனிக்கு ஆயிரம் லிட்டர் பாலால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இது மட்டுமின்றி 108 வகையான திரவியங்களுடன் சிவபெருமானுக்‍கு தொடர் அபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வஸ்திரம் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

61 - அடி உயர சிவலிங்க திருமேனி நிறுவப்பட்டு, ஆயிரம் லிட்டர் பால் மூலம்  நடைபெறும் அபிஷேகம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அபிஷேகப் பிரியனை வழிபட்டனர். வார்த்தைகளால் விவரிக்‍க இயலாத வகையில் பக்‍தி பரவசத்துடன் பரமனை பக்‍தர்கள் வணங்கினர். தமிழகத்திலேயே மிக உயரமான சிவலிங்கமாக இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day