மீனாட்சி அம்மன் கோவில், தங்க சப்பரம், தங்க குதிரையில் எழுந்தருளிய சுவாமி அம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களின் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் பெருவிழாவின், ஐந்தாம் நாள் நிகழ்வை முன்னிட்டு, சுவாமியும், அம்மனும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க குதிரையிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாசி வீதிகளில் கடல்போல் திரண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் அமர்ந்து தாண்டவம் ஆடியபடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஆலயத்தில்  பங்குனி சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவின் 5ம் நாளை முன்னிட்டு கருட சேவை விமரிசையாக நடைபெற்றது. இதன் பின்னர் மாட வீதி மற்றும் நான்கு ரதவீதிகளிலும் நடைபெற்ற திருவீதி உலா நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார் பேட்டையில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பங்குனி பொங்கல் விழாவில், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் இருந்து அக்னி சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. 

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஊமை மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 26-ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் நடைபெற்ற கம்பம் நடுதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் அக்னி கரகம், பூகரகம், மாவிளக்கு, அலகு குத்தி ஊர்வலகமாக சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும்  22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலா நடைபெறும். கொடியேற்ற நிகழச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்‍கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, திரளான பக்‍தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் வரும் வீதியில் காத்திருந்த பக்‍தர்கள், தேர் மீது உப்பை தூவி தங்களது நேர்த்திக்‍கடனை செலுத்தினர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோவிலில் தேவார செப்பேடுகள் கிடைத்த முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கோயில் நந்தவனம் பகுதியில் செப்பேடுகள் கிடைத்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தேவார பாடசாலை மாணவர்கள் தேவாரப் பதிகங்கள் ஓத, மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது.

கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவிலில் சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மூலவர் செண்பகவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களாலும், வாசனை திரவியங்களாலும் தாயாருக்‍கு அபிஷேகம் செய்யப்பட்டு, மூலிகைப் பொருட்களால் சுத்த ஹோமம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெருமாளுக்‍கும் தாயாருக்‍கும் பட்டு வஸ்திரங்கள் உடுத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 







 

Night
Day