மதுரை சித்திரை தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதேபோல் திருப்பதியில் வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற தங்க தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உடனுறை சுரும்பார் குழலி அம்மனுக்கு பால், இளநீர்  உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமி, உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற நாமம் முழங்க சிவ வாத்தியங்கள் இசைக்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.  இதனையொட்டி கோவிலில் இருந்து அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து நான்கு மாட வீதிகளையும் வலம் வந்த தேர் நிலையை அடைந்தது.

தென்காசி மாவட்டம் திருவிலஞ்சி குமாரசுவாமி கோவிலில் திருத்தேரோட்ட நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக திருவிலஞ்சி குமாரர் சிறப்பு அலங்கார தோற்றத்தில் காட்சியளித்தார். திருவிலஞ்சி குமாரர் எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி நாகர்கோவிலில் குட்டி குருவாயூர் என்று அழைக்கப்படும் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்லக்கில் சாமி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சிறப்பு தீபாராதனைகளுக்கு பின்னர் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் தங்கத் தேரோட்டம் கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர்கள் தங்கத்தேரில் எழுந்தருளிய நிலையில் தீப, தூப, நெய் வைத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் தங்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.






Night
Day