தமிழகம், புதுச்சேரியில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி உற்சாகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட மகபூப்பாளையம், தமுக்கம் மைதானம், நெல்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பக்ரித் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியபின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் சந்தை திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து அனைவரும் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர், வடகரை, புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் அதிகாலையிலே எழுந்து புத்தாடை அணிந்து ஒரு சேர சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். அப்போது சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருச்சி பீமநகர் ஜும்மா திடலில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மாநில தலைவர் ரபீக் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று துவா செய்தனர். அதேபோன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.Night
Day