தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழா, சங்காபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தீமிதி திருவிழா, சங்காபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வந்ததை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருநாளை முன்னிட்டு 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்‍குகளை ஏற்றி பூஜை செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு புடவைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து, ஊரின் அருகே அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் மைலாப்பூரில் அமைந்துள்ள புனித தோமையார் ஆலய 135ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 11 மின் தேர் ரத பவனி நடைபெற்றது. ஆலயத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து, 11 மின் தேர்கள் ஊரைச் சுற்றி வலம் வந்து பின் ஆலயத்தை வந்தடைந்தது. புனித தோமையாரை தரிசிக்க வந்த பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள புனித அதிசய அன்னை ஆலயம் புதுபிக்கப்பட்டதையடுத்து, ஆலயம் திறப்பு மற்றும் திருக்கொடி மரம் மந்திரிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்துக்‍களும், இஸ்லாமியர்களும் பாரம்பரிய முறைப்படி மேளதாளம் இசைக்‍க சீர்வரிசைகளை கொண்டு வந்து, ஆலய நிர்வாகிகளிடம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆலய கொடி மரத்தில் மும்மதத்தினரும் ஒற்றுமையாக கொடி ஏற்றியது மத நல்லிணக்‍கத்திற்கு எடுத்துக்‍காட்டாக இருந்தது. 

Night
Day