தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பொருள் கலாச்சாரம் : புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மக்களின் நலன் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் இருக்கும் திமுக அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களை எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு  திமுக அரசு கசிக்கிப்பிழிந்து வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார். வெயிலின் கொடுமை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் அல்லப்படுவதும், பேருந்து போக்குவரத்தினை பயன்படுத்தி தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டுவரும் சாமானிய மக்கள், தமிழகத்தில் அநேக இடங்களில் நிழற்குடை இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வாடி வதைக்கப்படுவதும் மிகவும் வேதனை அளிக்கிறது - திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இனி சட்டமன்ற தேர்தலின் போது மக்களிடம் போய் ஏதாவது கதைவிட்டு எப்படியாவது வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற மமதையில் இருக்கிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது - மழைக்கு ஓட இடமும் இல்லை, வெயிலுக்கு ஒதுங்க இடமும் இல்லை; இது தான் திமுக தலைமையிலான விளம்பர அரசின் சாதனையாக உள்ளது-கொடுமை, கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு ஒரு பெருங்கொடுமை ஆடிக்கொண்டிருந்ததை போல உள்ளது இன்றைக்கு தமிழகத்தின் நிலைமை - போதைப் பொருள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு, எங்கு பார்த்தாலும் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை காணமுடிகிறது - தமிழகத்தில் இன்றைக்கு வினோதமான புதுவடிவில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன - சமீபத்தில் கோவிலுக்கு செல்லும் இளம் பெண்களை போதையில் இருந்த சிலர் கேலி செய்ததால், போதையில் இருந்தவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் பெரும் சண்டை நடந்து, இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

 சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கிற்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்த திமுக தலைமையிலான அரசிடம் மக்களின் நலனைப் பற்றி பேச முடியுமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். போதைப் பொருள் விற்பனை கூடாரமாக தமிழகம் திகழ்கிறது - திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி, இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அரசு போக்குவரத்துக் கழக நகர பேருந்து, கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே வந்தபோது, அங்கு இருந்த போதை ஆசாமிகள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை கீழே உதைத்து தள்ளியதோடு கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - இதன் மூலம் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் - சிதம்பரம் 4 முனை சந்திப்பு சாலையில் விருதாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் தற்காலிக நடத்துனரை போதையில் தாக்கிய நபரை கைது செய்யக்கோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் திமுக தலைமையிலான அரசின் சட்டம், ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

சென்னையில் 18 வயது கூட எட்டாத சிறுவர்கள் போதை மயக்கத்தில் எங்கே இருக்கிறோம், எங்கே கிடக்கிறோம் என்பது தெரியாமல் சாலை ஓரத்தில் சுயநினைவின்றி விழுந்து கிடக்கும் அவலம் - போதைப் பொருள் பரவலை தடுக்காமல், நம் வருங்கால சந்ததியினரை சீரழித்து வரும் திமுக தலைமையிலான அரசின் மூன்று ஆண்டுகால சாதனை இதுதானா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்-சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள மதுபான கடைக்கு முன்புறம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த காவல் ரோந்து வாகனத்தை உடைத்த போதை ஆசாமிகளால் காவல் துறையினருக்கே பாதுகாப்பு தேவைப்படுகின்ற துர்பாக்கிய நிலைக்கு இன்றைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏழை, எளிய, சாமானியர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் அரசு பேருந்துகளில் பயணிக்க முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் - கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பேருந்து நிறுத்தங்களில் அடிப்படை தேவையான நிழற்குடை வசதி கூட இல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் சாமானிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்-பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள், முதியோர் இப்படி பலர் தங்கள் கல்லீரல் கருகிப்போகும் அளவிற்கு 105 டிகிரிக்கும் மேல் தகிக்கும் வெயிலில் நின்றுதான் தங்களது அன்றாட பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது- மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் செல்ல மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக்கொண்டு தான் நிற்க வேண்டி உள்ளது- "யானை வாங்க காசு இருக்காம், அங்குசம் வாங்க காசு இல்லையாம்"  என்ற கதையாக நிழற்குடை அமைத்ததரக் கூட வழியில்லாமல் இந்த அரசு போய்விட்டதா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்- இது போன்று மாநிலத்தில் ஏராளமான இடங்களில் நிழற்குடைகள் இன்றி மக்கள் பெரிதும் அவதிப்படுவது இன்றைய சாபக்கேடு என புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2013ம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது -இதற்காக கும்மிடிப்பூண்டியில் 2.47 ஏக்கர் பரப்பளவில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது - இந்த நிலையத்தில் ஆரம்பத்தில் 2 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது  - அனைத்து பேருந்து நிலையங்களிலும் பத்து ரூபாய்க்கு குறைந்த விலையில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்பட்டது -  மக்கள் தாகம் தணிக்க செயல்பட்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தையும் முடக்கியது தான் இந்த ஆட்சியாளர்களின் மூன்று ஆண்டுகால சாதனை - இன்றைக்கு அரசு பேருந்து நிலையங்களில் கொளுத்தும் வெயிலில் குடிநீர் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர் - இந்த கோடை வெயிலில் குடிநீர் பாட்டில்கள் தற்போது 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள், வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் -  தமிழ்நாடு முழுவதும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் திறந்து வைக்கப்பட்ட அம்மா குடிநீர் திட்டத்தால் எண்ணற்ற சாமானியர்கள் பயனடைந்த நிலையில், தற்போது அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

"கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை" என ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. அத்தகைய கதையினை நினைவு படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப அட்டைதாரர்கள் 5 லிட்டர் வரை மண்ணெண்ணை பெற்றுவந்த நிலையில், ஆளும் திமுக அரசு இம்மாதம் அதனை 100 மில்லி லிட்டராக குறைத்து, "சொல்லாததையும் செய்வோம்" என ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சியை பரிசாக அளித்துள்ளது - கடந்த காலங்களில் தமிழக அரசால், சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு 10 லிட்டர் மண்ணெண்ணையும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணையும் வழங்கப்பட்டு வந்தது - ஆனால் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் இத்தகைய மண்ணெண்ணையின் அளவு குடும்ப அட்டைதாரர்களுக்கு படிப்படியாக அதாவது 2 லிட்டர், 1 லிட்டர், ½ லிட்டர் என குறைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை அதாவது கடந்த மாதம் வரை ½ லிட்டர் வரை பெற்று வந்த குடும்ப அட்டை தாரர்களுக்கு தற்போது ஏப்ரல் மாதத்திற்கான மண்ணெண்ணை நகரப் பகுதியில் 200 மில்லி லிட்டராகவும், கிராமப்பகுதியில் 100 மில்லி லிட்டராகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன - திமுக தலைமையிலான அரசு தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களை கசக்கி பிழிவது கடும் கணடனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

எனவே, திமுக தலைமையிலான அரசு கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தமிழக மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் - மேலும், தேர்தல் வெற்றிக்கு பல கோடி ரூபாய்களை விளம்பரத்துக்காக அள்ளிக் கொடுத்த இந்த விளம்பர அரசு, வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் இன்றியமையா தேவையான நிழற்குடைகளை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைத்து தர வேண்டும் -தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருள் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்துக் கட்ட தேவையான அனைத்து வித கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day