சுனாமி ஆழிப்பேரலை 21-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினமான இன்று ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பட்டினப்பாக்கம் கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மியான்மார் மற்றும் மலேசியா உள்ளிட்ட 11 நாடுகளில் ஆழிப்பேரலைகள் எனும் சுனாமி பேரலைகள் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் 2 லட்சம் பேர் பலியாகினர். 

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பல ஆயிரம் பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
 
இந்தநிலையில், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினமான இன்று சென்னையில் மெரினா, காசிமேடு, பட்டினப்பாக்கம், திருவான்மியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

சென்னை ஸ்ரீ பவானி குப்பம் கடற்கரை கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி இறந்த உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் மாவட்டம், சோனாங்குப்பம் மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் ஏராளமான மக்கள், அமைதி ஊர்வலமாக சென்று கடலில் பால் ஊற்றி பூத்தூவி உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

நாகை மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும், ஆயிரத்திற்கும் அதிகமானோரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கடற்கரையிலிருந்து அமைதி பேரணியாக சென்று  அஞ்சலி செலுத்தினர். அப்போது பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கபாடியில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பேச் அணிந்து ஏராளமானோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்‌. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் 21ம் ஆண்டு சுனாமி தினத்தையொட்டி 27 மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊருக்கு கடல்  நீர் புகுந்தது. கடற்கரை கிராமங்களில் உள்ள வீடுகளை பந்தாடியது. மீன் பிடி  உபகரணங்கள் படகுகளை அலைகள் வாரி சுருட்டி சென்றதோடு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சுனாமி பேரலையில் சிக்கி  பலியானார்கள். சுனாமி தாக்கிய கோர சம்பவத்தின் 21வது ஆண்டு நினைவு தினம் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அதிகாலையில் தேவாலயத்தில் சிறப்பு திருபலிகள்  நடத்தப்பட்டு பின்னர் கடற்கரை வழியாக பெண்கள் மவுன ஊர்வலமாக வந்து 115 பேரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட மேல மணக்குடி கடற்கரை கிராமத்தில் உள்ள கல்லறையில் மெழுகுவர்த்திரி ஏந்தி  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி போன்ற பேராபத்து ஏற்பட்டால் பாதுகாக்கும் அளவுக்கு அரசு தரப்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ பாதுகாப்பு முறைகளை செய்யவில்லை  என்பதே மீனவ  மக்களின் வேதனையாக உள்ளது.


Night
Day