எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோயில் நிபுணர் குழு முடிவு செய்த நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஆர்.சிவராம சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்குல் செய்தார். அதில், வருகிற ஜுலை 7 ஆம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதை விட நல்ல முகூர்த்த நேரம் உள்ளதாகவும், அதே நாளில் மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடுமாறும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவு செய்த நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம் என்றும் வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது கோவில் விதாயகரிடம், எழுத்து பூர்வமாக விளக்கம் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.