கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

சித்திரா பெளர்ணமியையொட்டி அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு படைப்பத்து மாரியம்மன் கோவிலில் 27வது ஆண்டு விளக்கு பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. செல்வ வளம் சிறக்கவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும்வேண்டி சுமங்கலி பெண்கள் விளக்குகளை ஏற்றி பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். 

சித்ரா பௌர்ணமியையொட்டி, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கர்ணகி அம்பாள் சமேத ஸ்ரீ சித்ரகுப்த சுவாமிக்கு அபிஷேக நடத்தப்பட்டு வெள்ளி காப்பு சாற்றி, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உள்ளூர் மக்‍கள் மட்டுமின்றி வெளிமாநில பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எள் தீபம் ஏற்றி சித்ரகுப்தரை வழிபட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் அமைந்துள்ள தர்ம முனிஸ்வரர் ராக்கச்சி அம்மன் கோவிலில் சித்ரா பெளர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. பக்‍தர்கள் பறவை காவடி, வேல் காவடியை சுமந்து கோயிலுக்‍கு ஊர்வலமாக கொண்டு வந்ததைத் தொடர்ந்து, கோயில் வாசலில் அமைக்‍கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டுதேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு மங்களநாத சுவாமியும் மங்களேஸ்வரி அம்பாளும் அலங்கரிப்பட்ட திருத்தேரில் வீற்றிருக்‍க, பக்‍தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.  

தருமபுரி மாவட்டம் வெள்ளாளன் கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள கருப்புக்கோட்டை ஸ்ரீ கருப்பு சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமியை யொட்டி படி அளக்கும் வைபவமும் பிடிகாசு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. கருப்பு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து கோயில் பூசாரி கத்தி மீது நின்றவாறு அருள்வாக்‍கு சொன்னார். இதில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கருப்பு சுவாமியை தரிசனம் செய்தனர்.

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலில் 10ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்து எட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி கோயிலுக்‍கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்‍கு பாலபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. 

புதுச்சேரி செந்தாமரை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விஜய கணபதி திருக்கோவிலின் 27வது ஆண்டு விழாவையொட்டி கணபதிக்‍கு சிறப்பு அபிஷேகமும், மஞ்சள் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு பல்வேறு ஆபரணங்கள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயக பெருமானை வழிபட்டு சென்றனர். 

விருதுநகர் மாவட்டம், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்‍குழி விழா சிறப்பாக நடைபெற்றது. வேண்டுதல் நிறைவேறிய பக்‍தர்கள் கோயிலுக்‍கு முன்பு அமைக்‍கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்‍கடன் செலுத்தினர். 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் சுவாமி திருக்கோயிலில் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளங்கள் இசைக்‍க வாணவேடிக்கையுடன் தொடங்கிய தேரோட்டத்தில் பெண்கள் விரதம் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்து அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் ஆலயத்தில் சித்திரை மாத பெளர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்‍தர்கள் விரதமிருந்து பால் காவடி, பன்னிர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்டவற்றை கோயிலுக்‍கு கொண்டுவந்து நேர்த்திக்‍கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்‍கு பாலபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. 

Night
Day