கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்‍களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழாக்‍களில் திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்‍கல் மாவட்டம் பழனியில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பெண்கள் பால் குடத்தை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்‍கு ஊர்வலமாக எடுத்துச் சென்று குழந்தை வேலாயுத சுவாமிக்‍கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 

கரூர் மாவட்டம் அகிலாண்டபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிக்‍கு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. 

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த சுவாமி மற்றும் அம்பாளை சுற்றுவட்டார பகுதி மக்‍கள் கண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர். 

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, புதுக்கோட்டை அருகே செல்லுகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் வீரலட்சுமி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பெண்கள் 108 விளக்குகளை ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்‍கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் 108 விளக்‍குகளுக்‍கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை நினைத்து மனமுருக வழிபட்டனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரக்கோட்டாலம் கிராமத்தில் அமைந்துள்ள ராதா ருக்குமணி சமேத நவநீத கிருஷ்ணன் மற்றும் ஆண்டாள் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் 22 அடி உயரம் கொண்ட மகாவீரர் சஞ்சீவி ஆஞ்சநேயர், விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட ஆறு தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. பக்‍தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்‍தி முழக்‍கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ மாரிமேல்கட்டமன் ஆலயத்தில் 12ம் ஆண்டு பால்குட திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து பால் குடத்தை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் அமைந்துள்ள அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் கோயில் தேரோட்ட வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீலகண்டா, நீலகண்டா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் வலம் வந்தார். சுற்றுவட்டார பகுதி மக்‍கள் திரளாக குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பாலபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி புஷ்ப காவடி, வேப்பிலை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

சித்ராபௌர்ணமியை ஒட்டி திருவாரூர் காகிதக்காரத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மின்னொளி அலங்கார ரதத்தில் எழுந்தருளிய அம்மன், பிரகாரத்தை வலம் வந்தபோது, அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் நிறைவு விழாவையொட்டி, அம்மன் மூலஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் புறப்பட்டு சென்று திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்துடன், தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வானவேடிக்கையுடன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். 

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டையில் அமைந்துள்ள கடும்பாடி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் சிவன், அர்த்தநாரீஸ்வரர், அம்மன், அய்யனார், உள்ளிட்ட வேடமணிந்து  ஊர்வலமாக சென்று, கையில் குழந்தைகளுடன், கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த  தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள இருதய கமலநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நடராஜர் பஞ்சமூர்த்தி வீதியுலாவும் சக்கர தீர்த்த குளத்தில் தீர்த்த வாரி உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றிரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் இருதய கமலநாத சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி, 3 முறை கோவில் குளத்தில் வலம் வந்து அருள்பாளித்தார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்களப்பால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆயிரம்வேலி அம்மன், மூட்டான் திருக்கோயிலில் குதிரை எடுப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.  அப்போது, களப்பால், மூலக்கடை பகுதியிலிருந்து மேளதாளங்கள் முழங்க மண்குதிரைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஆயிரம்வேலி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே சிந்தாமணியில்அமைந்துள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கடந்த ஒருவாரமாக சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், பறவைக்காவடி எடுத்தும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் பாதை குழு சார்பாக கிரிவலம் நடைபெற்றது. இதில், பெண்கள் முளைப்பாரி ஏந்தி பத்மகிரீஸ்வரர் மலையை சுற்றி வலம் வந்தனர். அப்போது அபிராமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்கள் மத்தியில் கிரிவலமாக சென்று அருள் பாலித்தார். 

ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் உள்ள சோளீஸ்வரர் ஆலய சிவாச்சாரியார்கள் மழை வேண்டி, வருண பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து சிறப்பு பூஜை நடத்தி வருண பகவானை வேண்டி மந்திரங்கள் ஓதியபின் காவிரியாற்றில் இறங்கி மந்திரம் ஓதினர். அப்போது கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும் வேண்டுமென வருணபகவானை வேண்டினர்.

Night
Day