கார்த்திகை மாத பிறப்பு - சபரிமலை ஐயப்பன் கோயிலில் குவியும் பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இன்று அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். இதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகிறது.  இதற்காக நேற்று மாலை 4 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 

கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்கியது. மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறவுள்ளது.

பூஜையின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 26ம் தேதி மண்டல பூஜையும், முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சபரிமலை தரிசனத்திற்கு தினசரி ஆன்லைன் மூலம் பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்களும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த டிக்கெட் பெற்ற பத்தாயிரம் பக்தர்கள் என தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உடனடி முன்பதிவிற்கு எருமேலி, பம்பை, வண்டிப்பெரியார்சத்திரம் ஆகிய இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பக்தர்கள் 18 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.  

varient
Night
Day