எழுத்தின் அளவு: அ+ அ- அ
நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. காட்சிகளை நீக்கும் அளவுக்கு வெடித்த சர்ச்சைகள் தான் என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையில் வெளியாகியுள்ள எல்.2: எம்புரான் படம் ஒருபக்கம் வசூலை வாரி குவித்து வரும் அதேவேளையில் தொடர் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2ம் பாகம் தான் இந்த எல்.2:எம்புரான். பிரபல நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோனியோ தாமஸ், சுராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தில் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தின் தொடக்கமே யாருமே எதிர்பார்க்காத வகையில் வட இந்தியாவில் நடைபெறும் மிக கொடூரமான மத வன்முறையை சித்தரிக்கும் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்துத்துவா வன்முறை கும்பல் ஒன்று இஸ்லாமியர்களை வேட்டையாடி படுகொலை செய்வது போன்றும் கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த காட்சிகள் அப்பட்டமாக 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகள், பானு பலாத்கார சம்பவம் உள்ளிட்டவைகளை நினைவூட்டுவதாக கூறி சர்ச்சை வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் எரிந்து கொண்டிருக்கும் சர்ச்சைக்கு எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. நாட்டையே உலுக்கிய குஜராத் மத வன்முறை சம்பவத்தில் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் எம்புரான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் பஜ்ரங்கி என்பது படக்காட்சிகள் அனைத்தும் குஜராத் சம்பவத்தையே சித்தரிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் அமைந்தது.
இந்தநிலையில் தான் இந்த படம் இந்துத்துவாவுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி படம் ரிலீஸ் ஆன முதல் நாளே சர்ச்சை வெடித்தது. இந்துத்துவா ஆதரவாளர்கள் எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை தொடங்கினர். சிலர் எம்புரான் சினிமா டிக்கெட்டை ரத்து செய்து அதன் ஸ்கிரீன்ஷார்ட்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இப்படி அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளே படத்துக்கு புரோமோஷமான மாறியதோ என்னவோ, படம் வெளியான 2 நாட்களிலேயே உலகம் முழுவதும் சுமார் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது.
படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் புனையப்பட்டவையே என்றும் எந்த உள்நோக்கமும் கொண்டவை அல்ல என கூறி disclaimer போடப்பட்டிருந்த போதும், படத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்குவதோடு, வில்லனின் பெயரை மாற்றவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாமாக முன்வந்துள்ளது. இந்த நிலையில் 'எம்புரான்' படத்தின் சில காட்சிகள் தன் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக தானும் தனது படக்குழுவினரும் வருந்துவதாக நடிகர் மோகன்லால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, நாடு எதிர்கொண்ட மிகவும் கொடூரமான இனப்படுகொலை குறித்து சினிமாவில் கூறப்படும் கருத்து சங்பரிவார் அமைப்பினரை கோபப்படுத்தி உள்ளதாகவும் தொண்டர்கள் மட்டும் அல்லாது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் படத்தின் தயாரிப்பு தரப்புக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த அழுத்தத்தாலேயே படக்குழுவினர் சினிமாவை மறு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாசிச மனப்பான்மையின் புதிய வெளிப்பாடு எனவும் விமர்சித்துள்ளார்.
இதனிடையே எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் பிரித்விராஜ் தொடர்ந்து முல்லை பெரியாறு குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் கூறி படத்துக்கு பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.