எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏழை, எளிய மக்களுக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டது தான் நியாயவிலை கடைகள். ஆனால் நியாய விலை கடைகளிலேயே பொருட்களை வழங்காமல் தாமதப்படுத்துவது என அவர்களை காக்க வைக்கும் நிலையே பெரும்பாலான ரேஷன் கடைகளில் நடக்கிறது... இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை இங்கு பார்க்கலாம்...
புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயலில் உள்ள நியாயவிலை கடையில், தொண்டைமான் நகர், சின்னப்பா நகர், கல்யாணராமபுரம், மேட்டுத்தெரு, திருவப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாத இறுதியில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தங்கள் பகுதியில் இருக்கும் நியாயவிலை கடையிலும், மண்ணெண்ணெய் மற்றும் அடப்பன்வயலில் இருக்கும் நியாயவிலைக் கடையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நியாயவிலை கடையில் 10க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் மண்ணெண்ணெய் வழங்கும் போது எப்போதுமே காத்து கிடக்க வேண்டிய சூழல் நிலவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதேபோல் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாக கூறியதால் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருந்தனர்.
இதற்கிடையில் திடீரென கைரேகை வைப்பதற்கு சிக்னல் கிடைக்காததால் மண்ணெண்ணெய் வழங்குவதில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள், ஒரே கடையில் 10க்கும் மேற்பட்ட பகுதி மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், மண்ணெண்ணெய் வாங்குவதற்காக தங்களின் வேலைகளை விட்டு வந்து காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.
மண்ணெண்ணெய் வாங்குவதற்கு மட்டும் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறும் மக்கள், தொடர்ச்சியாக இந்த பிரச்னையை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். எனவே, அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்க கூடிய தங்களின் நியாய விலை கடையிலேயே மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் வசதிக்கேற்ப தான் நியாயவிலை கடைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் மண்ணெண்ணெய் மட்டும் ஒரு கடையில் தான் வழங்கப்படும் எனக் கூறுவதால் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள். இதனை மாவட்ட கூட்டுத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.