அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள்... விளம்பர ஆட்சியில் ரவுடியிசமாகும் காவல்துறை...

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை கடமையை மறந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருவது இந்த விளம்பர திமுக-வின் அலங்கோல ஆட்சியில் சர்வசாதாரணமாகி விட்டது. லாக்கப் மரணங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்து வருவதே இதற்கு சாட்சி. முதலமைச்சர் ஸ்டாலின்  ஆட்சியில் காவல்துறையின் அராஜகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை இன்று விளம்பர திமுகவின்  கையில் சிக்கி சின்னாபின்னமாகி போயிருக்கிறது. மக்களுக்கு நண்பனாக இருக்க வேண்டிய காவல்துறை, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் காவல்துறை என்றாலே மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிர்வாக திறனற்ற விளம்பர திமுக அரசே காரணம் என்பதற்கு புள்ளி விவரங்களே சாட்சி... 

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான விளம்பர திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் 2022ம் ஆண்டு முதல் காவல்துறை சித்திரவதையால் 24 லாக்கப் மரணங்கள் நடந்திருப்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, 2023ல்  செங்கல்பட்டு சிறுவர் இல்லத்தில் 17 வயது சிறுவனின் லாக்கப் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்குள் வேரூன்றியுள்ள மிருகத்தனத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. கைது செய்யப்பட்ட சிறுவனை சீர்திருத்துவதற்கு பதிலாக, கற்பனை செய்ய முடியாத உடல்ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார். நடக்க முடியாத அளவுக்கு அடித்த பிறகும் அவருக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை தொடர்ந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதை விட்டுவிட்டு, மாவுக்கட்டு என்ற புதிய சித்ரவதை நடைமுறையையும் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல் நிலையங்களில் உள்ள வழுக்கும் கழிப்பறைகள் காரணமாகவே மாவுக் கட்டு காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை அதற்கு புதிய விளக்கம் அளிப்பது நகைச்சுவையிலும் பெரிய நசைக்சுவை.  

2024ம் ஆண்டில் 10 மாத காலப்பகுதியில் சென்னை புழல் சிறைக்குள் மாவுக்கட்டுடன் வந்தவர்கள் பற்றிய ஆர்டிஐ தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அப்படி அழைத்து வரப்பட்ட 304 பேரில், 163 பேருக்கு முன்கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அவர்களில் 52 பேருக்கு இடது முன்கையிலும் 112 பேருக்கு வலது முன்கையிலும் காயம் ஏற்பட்டது. 61 பேருக்கு கை எலும்பு முறிவும், 77 பேருக்கு கால் எலும்பு முறிவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதவிர 2021ம் ஆண்டு முதல் 18 சம்பவங்களில் 21 என்கவுன்டர்களும் நடந்துள்ளன. என்கவுண்டரிகளின் அதிகரிப்பு தமிழக காவல்துறையின் தோல்வியை அம்பலப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் திருந்தாத விளம்பர திமுக அரசால், போலீசாரின் சித்ரவதையால் மற்றொரு லாக்கப் மரணம் அரங்கேறி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 

அதிகரித்துவரும் லாக்-அப் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. இதுபோன்ற அராஜக சம்பவங்களால் காவல்துறை உண்மையிலேயே ஸ்டாலின் கட்டுப்பாட்டிதான் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத்தானே செய்யும். 

varient
Night
Day