லாக்அப் மரணம் : "தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்"

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே 10 சவரன் தங்கநகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீசாரின் சரமாரியான தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஜெய்பீம் பட பாணியில் போலீசாரால் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த கொடூர சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஐஎஸ்எப் எனும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 27ம் தேதி அன்று கோவிலில் பணியில் இருந்தபோது, கோவிலுக்கு சாமி கும்பிட 2 பெண்கள் காரில் வந்துள்ளனர். அவர்கள் கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்துவிட்டு, காரை பார்க்கிங் செய்யும்படி கூறியுள்ளனர். தனக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் மூலம் காரை பார்க்கிங் செய்துள்ளார்.

சாமி கும்பிட்டு திரும்பி வந்த 2 பெண்களும் காருக்குள் ஏறியபோது, காரில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை திருடுபோயிருந்தது. இதுகுறித்து அஜித்குமாரிடம் கேட்டபோது, நகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தான் காருக்குள் ஏறவில்லை என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நகை திருடுபோனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்தனர். 

அதன்பேரில் விசாரணைக்காக, அஜித்குமார், அவரது தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் உட்பட பலரையும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும், காருக்குள் வைத்தும் சரமாரியாக போலீசார் தாக்கியிருக்கின்றனர். 

போலீசாரின் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்து அஜித்குமார் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அறிந்த மடப்புரம் கிராம மக்கள், திருப்புவனம் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் குவிந்தனர். அஜித்குமாரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா ஆனந்தன், மணிகண்டன் என 6 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டுள்ளார். 

விசாரணைக்கு அழைத்துச் சென்று கோவில் தற்காலிக ஊழியரை போலீசார் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அஜித்தை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து தாக்கியுள்ளனர். அப்போது, தான் இறந்துவிடுவேன் போதும் என வலியால் அஜித் கதறி உள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் வாயில் மிளகாய்பொடியை போட்டுள்ளனர். காரம் தாங்க முடியாத அஜித்குமார் தண்ணீர் வேண்டுமென கேட்டுள்ளார். அதனையும் கண்டுக்கொள்ளாமல் காவல்துறையினர் தொடர்ந்து தாக்கியதால் உயிரிழந்தாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 


Night
Day