வாட்டி வதைக்கும் கத்திரி வெயில்... வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி...

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வரும் வெயிலால் மக்கள் சிரமப்படுகின்றனர். கோடை தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வரும் நிலையில் கத்திரி வெயில் காலங்களில் போது மக்களின் நிலை என்ன?... கத்திரி வெயிலில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்...

தமிழகத்தை பொறுத்தவரை பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரங்களில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்தே மக்கள் வெயிலில் இருந்து தங்களை எப்பது தற்காத்து கொள்வது என யோசிக்க தொடங்கிவிட்டனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சொல்லொண்ணா சோர்வை பொதுமக்கள் சந்தித்து சிரமப்படுகின்றனர். 

ஏப்ரல் முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மே மாதத்தில் நிலவும் கத்திரி வெயிலை கண்டு கலங்காதோர் யாருமில்லை. ஏனெனில் கத்திரி வெயிலின் காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களின் வெப்பநிலை நூறு டிகிரியை எட்டும். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில் இன்று முதல் மே 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. மற்ற மாதங்களில் எவ்வளவு வெயில் அடித்தாலும், மே மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கத்தைக் கண்டு பொதுமக்கள் அஞ்சுகின்றனர் என்று கூறலாம். ஏனெனில் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். பூமியின் வட அரைக்கோளத்தை நோக்கி சூரிய ஒளி, செங்குத்தாக படுவதும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவ்வப்போது மழை பெய்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஒரு புறம் வெயில் சுட்டெரித்தாலும் மறுபுறம் கோடை மழை குளிர்ச்சியையும் தருகிறது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி  உயர்ந்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியல் வரை காணப்படும் என தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அக்னி நட்சத்திர கத்திரி வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்...? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது. கோடை காலங்களில் பொதுவாக நிறைய நீர் ஆகாரங்களை உட்கொள்வது நம்மை வெயிலின் தாக்கத்திலிருந்தும், டீஹைட்ரேட் ஆகாமல் பாதுகாக்க முடியும். வெயில் காலங்களில் மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி பழம், கிர்ணி பழம் உள்ளிட்டவைகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நீர்ச்சத்து மிக்க பொருட்களை உட்கொள்ள வேண்டும். உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. 

அதேபோல் வெயில் காலங்களில் பாலிஸ்டர் உடைகளை தவிர்த்து பருத்தி உடைகளை அதிகமாக அணிந்து கொள்ளலாம். காட்டன் உடைகள் அணிவதன் மூலம் வெயிலின் மூலம் உருவாகும் வியர்வை உறிஞ்சப்படும். வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள சன் ஸ்கிரீன்கள் பயன்படுத்துவது சிறந்தது. வெயில் காலங்களில் வேலைகளில் வெளியில் சென்றாலும் அதற்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுவாக வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையமும், மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்.

varient
Night
Day