எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கி வரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 60 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தணிக்கை செய்ய வந்த அதிகாரிகளை, வங்கி செயலாளர் தனது உறவினர்களுடன் சேர்ந்து தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக, துரைசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், துறை சார்ந்த அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, வங்கி செயலாளர் துரைசாமி, சுமார் 60 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த மூன்று நாட்களாக, துறை சார்ந்த அதிகாரிகள், ராயப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், மீண்டும் தணிக்கை செய்ய வந்தனர். இதனை அறிந்த துரைசாமி, அவரது உறவினர்களை விட்டு, அதிகாரிகளை தணிக்கை செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இதனை வீடியோ எடுக்க முற்பட்டபோது, அவர்களை துரைசாமி உறவினர்கள் ஆபாசமாக பேசி, வெளியூர் நபர்களுக்கு இங்கு என்ன வேலை எனக்கூறி, மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் வீடியோ வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தணிக்கை செய்வதற்கு முன்பாக, கையாடல் செய்த பணத்தை சரி செய்வதற்காகவும், அதிகாரிகளை சரிகட்டுவதற்காகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் துரைசாமி, தனியார் நிதி நிறுவனத்தை நாடி, 20 லட்ச ரூபாய் கடன் பெற்று இருப்பது அம்பலமாகியுள்ளது.
கடனை கொடுத்த தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் வங்கிக்கு நேரில் வந்து, அதிகாரிகள் தணிக்கை செய்து கொண்டிருந்தபோதே துரைசாமியை வெளியே அழைத்து, பணத்தை கொடுத்தால் மட்டுமே தான் இங்கிருந்து போவோம் எனக்கூறி, பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். பணத்தை மாலைக்குள் நேரில் வந்து தருகிறேன் எனக்கூறி, அவர்களை சமாளித்து துரைசாமி அனுப்பி வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
விளம்பர திமுக ஆட்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.