எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீட் தேர்வு குளறுபடியின் உச்சகட்டமாக, தனக்கு OMR ஷீட் டையும், கேள்வித்தாளையும் மாற்றி மாற்றிக் கொடுத்ததாக மாணவி ஒருவர் கண்ணீர் மல்க புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக தேர்வுக்காக தயாரான நிலையில் வினாத்தாள் குளறுபடியால் தேர்வை சரியாக எழுதாத வேதனையில் மனம் நொந்து தேர்வு மையத்தை விட்டு கண்ணீர் மல்க வெளியேறினார் அந்த மாணவி. மாணவி சுவாத்திகா ஹரிணியின் குமுறல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...
மருத்துவ படிப்பை தங்களுடைய எதிர்காலமாக முடிவு செய்த மாணவ, மாணவிகள் நாடு முழுவதும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றனர். பல இடங்களில் குளறுபடிகளும் கெடுபிடிகளும் அரங்கேறிய நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நடந்த சம்பவம் மாணவி சுவாத்திகா ஹரிணியின் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி மையத்தில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய மாணவி சுவாத்திகா ஹரிணி, தேர்வு முடிந்து கண்ணீருடன் வெளியே வந்தார். என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் விசாரித்த போது, தேர்வு மையத்தில் தனக்கு நேர்ந்த அவலத்தை கலங்கிய கண்களுடன் விவரித்தார் அந்த மாணவி.
தேர்வு மையத்தில் இருந்த ஏழாம் எண் அறையில் தான் தேர்வு எழுதியதாகவும், அப்போது 46ம் எண் வினாத்தாளுக்கு பதிலாக, தனக்கு 45ம் எண் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட அந்த மாணவி.
தேர்வு எழுத துவங்கி அரை மணி நேரத்திற்கு பிறகு வினாத்தாள் மாற்றி கொடுத்தது தெரிய வந்ததாக கூறிய மாணவி, அதற்கு பின் நடந்த குழப்பத்தை விவரித்தார் கவலை தோய்ந்த முகத்துடன். ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை என்று தேர்வு மையத்தில் இருந்தவர்கள் கூறினாலும், ஓ.எம்.ஆர்-ல் தன்னுடைய ரோல் நம்பர் தவறாக இருப்பதாக பதற்றத்துடன் கூறினார் மாணவி சுவாத்திகா ஹரிணி
வினாத்தாள் குளறுபடியால் தேர்வை சரிவர எழுத முடியவில்லை என்றும் நிறையே நேரம் வீணானதாகவும் வேதனையுடன் தெரிவித்த மாணவி, இந்த குழப்பத்தால் கஷ்டப்பட்டு படித்ததெல்லாம் வீணாகி விட்டதாக தெரிவித்தார் தழுதழுத்த குரலுடன்.
பல மாதங்களாக திட்டமிட்டு நீட் தேர்வுக்காக படித்த மாணவி வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவத்தால் தேர்வை ஒழுங்காக எழுத முடியாமல் கண்ணீர் மல்க தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.