சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்... DQ வீட்டில் ED ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல நடிகர் மம்மூட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மானின் சென்னை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை அதிரடி நடத்தினர். துல்கர் சல்மானை சுற்றி நடக்கும் சோதனையின் பின்னணி என்ன?... பார்க்கலாம் விரிவாக...

இந்திய அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்வதன் மூலம் நடைபெறும்  முறைகேடுகளைக் கண்டறிய சுங்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ‘ஆபரேஷன் நும்கூர்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது இந்திய அரசின் சுங்கத் துறை.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் துல்கர் சல்மான், பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகள் மற்றும் எலம்குளத்தில் உள்ள நடிகர் மம்மூட்டியின் வீட்டில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலம் பறிமுதல் செய்யப்பட்ட 39 கார்களில் மற்றவர்களின் 33 கார்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை நிலுவையில் இருப்பதால் துல்கர் சல்மானின் கார்கள் விடுவிக்கப்படவில்லை. கார்களை விடுவிப்பதற்காக கார் வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சுங்கத்துறை அதிகாரிகள் கேட்ட நிலையில் ஆதாரங்களை சமர்ப்பிக்காத துல்கர் சல்மான், தான் அந்த கார்களை  சட்டப்படி வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பித் தர வேண்டும் என்றும் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து அமலாக்கத் துறைக்கும் சுங்கத் துறைக்கும் சவால் விடுத்தார். துல்கர் சல்மானின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் 3வது கார் ஒன்றையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துல்கர் சல்மான் இல்லத்தில் புதன் கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். மொத்தம் 5 அதிகாரிகள் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் துல்கரின் சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும்  சோதனையில் இறங்கினர். சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இது மட்டுமன்றி மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நாயகனான துல்கர் சல்மான், படத்தயாரிப்பிலும் கோலோச்சி வருகிறார். கடைசியாக இவரின் தயாரிப்பில் வெளியான ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, மலையாளத் திரையுலகிலும் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்த வருவாய் குறித்தும் கணக்குகள் குறித்தும் இந்த சோதனையில் ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Night
Day