சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் தோப்பரை பைகள்... இறை சேவையாக செய்யும் தயாரிப்பாளர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகரை குளிர்விக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் தோப்பரை எனப்படும் ஆட்டுத் தோல் பைகள் தயாரிக்கும் பணியில் காரியாப்பட்டியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சித்திரை திருவிழாவின் அங்கமான இந்த தோப்பரையை எப்படி தயாரிக்கின்றனர் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

உலக பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் முக்கியமான திருவிழா என்றால் மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா தான். சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில்  இறங்கும் வைபவத்தின் போதும், ராமராயர் மண்டபத்தில் வைத்தும் கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் கள்ளழகருக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரது மனம் குளிர செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. 

இவ்வாறு தண்ணீர் பியீச்சி அடிக்க பயன்படும் ஒருவகை பை சாதாரணமானது என நினைக்க வேண்டாம்... அதற்காக பக்தர்கள் நீண்ட நாட்கள் பயபக்தியுடன் விரதமிருந்து தோப்பரை எனப்படும் ஆட்டு தோலால் பை தயாரிக்கின்றனர். அந்த பையில் தண்ணீர் நிரப்பி கள்ளழகர் மீது பீய்ச்சியடிக்கும் நிகழ்வை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.  

கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க பயன்படுத்தும் தோப்பரை எனப்படும் ஆட்டுத்தோல் பைகள் தயாரிக்கும் பணியில் கால காலமாக பல தலைமுறைகளாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

கள்ளழகரை குளிர்விக்க பயன்படுத்தப்படும் இந்த ஆட்டு தோல் பை தயாரிப்பு பணிகளானது சித்திரைத் திருவிழா தொடங்கும் 3 மாதத்திற்கு முன்பில் இருந்தே தொடங்கிவிடும்.. வருமானம் என நினைத்து  இந்த பணியை செய்யவில்லை என கூறும் காரியாப்பட்டி மக்கள், நாங்கள் அனைவரும் விரதமிருந்து பயபக்தியுடன் ஆட்டு தோல் பை தயாரிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக கூறுகின்றனர். 

ஆண்டுக்கு 8 மாதங்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைக்கும் நாங்கள், நான்கு மாதங்கள் லாப நோக்கமின்றி இறைவனுக்கு செய்யும் சேவையாக ஆட்டுத்தோல் பைகள் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். எத்தகைய ஏழ்மை நிலையிலும் இந்த பணியினை விடாமல் பல தலைமுறைகளாக மேற்கொண்டு வருவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக பெருமை பொங்க தெரிவிக்கின்றனர்.

ஆட்டுத் தோலை பதப்படுத்த இப்பகுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் திண்டுக்கல்லில் பதப்படுத்தும் நிலை உள்ளதாகவும் இதனால் தயாரிப்பு செலவு கடந்த சில ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தோப்பரை தயாரிக்கும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். எந்தவித லாபமும் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாகவும், ஆனாலும் இந்த நஷ்டமும், உடல் உழைப்பினால் ஏற்படும் கஷ்டமும் தங்களுக்கு எந்த பாதிப்பையும் தருவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.  

தங்களைத் தொடர்ந்து தங்களது வாரிசுகள் மேற்கொள்ள இத்தொழிலுக்குரிய மூலதன கடன் மற்றும் பதப்படுத்துவதற்குரிய வசதிகளை செய்து கொடுத்தும் ஆண்டுதோறும் விற்பனையாகாமல் மீதமுள்ள தோல் பைகளை பாதுகாத்து வைத்துக் கொள்ள சேமிப்பு கிடங்கு ஒன்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தோப்பரை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவருவோரின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day