சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி ஓய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த அதிர்ச்சியில் இருந்தே ரசிகர்கள் இன்னும் வெளியவராத நிலையில், தற்போது அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆவதாகவும், உண்மையைச் சொன்னால், இந்த டெஸ்ட் வடிவம் தன்னை இவ்வளவு தூரம் அழைத்து வரும் என்று தான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது டெஸ்ட் போட்டிதான் என குறிப்பிட்டுள்ள விராட் கோலி, வெள்ளை நிற ஜெர்சியில் விளையாடுவது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 9 ஆயிரத்து 230 ரன்கள் அடித்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day