நடப்பாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டை போலவே, நடப்பாண்டிலும் 11 ஆயிரத்து 350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி சேர்த்து 5 ஆயிரத்து 200 எம்பிபிஎஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவித இடங்கள் மாநில அரசு சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இது தவிர தனியார் கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9 ஆயிரத்து 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள நிலையில், 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்களில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதற்காக ஆன்லைன் வழி விண்ணப்பப் பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கியது. மொத்தம் 72 ஆயிரத்து 943 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பிடி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்த 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ், பிடி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலில் நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். சேலத்தை சேர்ந்த அபிநித் நாகராஜ் இரண்டாவது இடம் பிடித்தார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், போலி சான்றிதழ் அளித்த 25 பேர் நீக்கப்பட்டதுடன், மூன்று ஆண்டுகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.