எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மே மாத தொடக்கம் முதல் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலுக்க பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு அறிவுரை வழங்கியது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. இவை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளநிலையில், இதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பொது வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா தற்போது பரவி வருவதாகவும், பொது வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது நல்லது எனவும் தெரிவித்துள்ளது. இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.