சிசேரியனை விரும்பும் கர்ப்பிணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் மருத்துவ சிக்கல் இல்லாத போதிலும் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றெடுக்க விரும்புவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏன் கர்ப்பிணி பெண்கள் அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தைகளை பெற்றெடுக்க நினைக்கிறார்கள்..? இதனை கட்டுப்படுத்த என்ன தான் வழி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

முன்பெல்லாம் பெரும்பாலான கர்ப்பிணிகள், தங்களின் முதல் பிரசவம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என எண்ணி, அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது மட்டும் அல்லாமல் மருத்துவர்களின் அறிவுறைகளையும் பெறுவர். 

ஆனால் சமீப காலமாக கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சிக்கல்கள் எதுவும் இல்லாதபோதும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், 2016 மற்றும் 2021 ஆண்டுக்கு இடையில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 17 புள்ளி ஒரு சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பதை 15 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பவர்களின் சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவது தாய்க்கும் குழந்தைக்கும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கும் மருத்துவர்கள், இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக தங்கள் நல்ல நிலையை அடைய வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது கருவுறுபவர்களின் வயது வரம்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் குழந்தை பெற்றெடுப்பதில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் அச்சத்தில் பலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்று எடுக்க விரும்புவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருமுறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு விட்டால் அடுத்தடுத்து குழந்தை பெற்றெடுக்கும் உடலில் காயங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சுகப்பிரசவம் மூலம் முதல் குழந்தையை பெற்றெடுத்தால் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதில் மிகவும் சுலபமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகளை பெற்றெடுக்க நினைப்பது பொருளாதார ரீதியாகவும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் சுகப்பிரசவத்தின் முக்கியத்துவம் பற்றியும் வலியில்லாமல் சுகப்பிரசவம் மேற்கொள்வதற்கான மாற்று சிகிச்சைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அனைவரது கோரிக்கையாக உள்ளது.

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் அஜித்குமார் உடன் செய்தியாளர் முகமது ஜெய்லானி

Night
Day