அவசர காலத்திற்கு உதவும் "ட்ரோன்" - தமிழக பொறியாளர் அசத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அவசர சிகிச்சைக்காக மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தஞ்சாவூர் பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் பல்வேறு வழியிலும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த வகை ட்ரோன் மிகவும் பயன்படும் என கருதப்படுவதால் தமிழக அரசு இந்த ட்ரோனுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இதனை வடிவமைத்தவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை கூட்டுறவு ஸ்ரீநகர் கோ ஆப்ரெட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் பாலுராஜ். இவர் தஞ்சாவூரில் பொறியியல் பட்டபடிப்பை படித்து முடித்துவிட்டு, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று ஆளில்லா ட்ரோன்களை வடிவமைத்து அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து சொந்த ஊரில் அவசர சிகிச்சைக்காக மருந்து பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன்களை வடிவமைத்து வழங்க வேண்டும் என நீண்ட நாள் கனவை நிறைவேற்ற, கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு வேலையை புறந்தள்ளிவிட்டு தஞ்சாவூர் வந்தார். தஞ்சாவூரிலேயே கடந்த இரு ஆண்டுகளாக அவசர சிகிச்சைக்காக மருந்து பொருட்களையும், ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளையும் கொண்டு செல்லும் வகையில் ட்ரோன் ஒன்றை வடிவமைத்தார்.

முழுவதும் சொந்த நாட்டு தயாரிப்பில் 3 டி பிரிண்டிங்கை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன்களை அண்மையில் ஸூகோ நிறுவனத்தின் தலைவரும் பத்மஸ்ரீ விருதாளருமான ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டு, தினேஷின் ட்ரோன் வடிவமைப்பை பாராட்டியதோடு மட்டும் இல்லாமல், தனது நிறுவனத்தின் சார்பில் ட்ரோன்களை வடிவமைக்க அதற்கான முதலீடுகளை வழங்க முன் வந்தார். 

தினேஷ் பாலுராஜால் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் மூலம் மலைவாழ் பகுதிகளில் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்களையும், இதர அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்களையும், உடல் உறுப்புகளையும் விரைவாக கொண்டு செல்ல முடியும் என்றும் இதனை பயன்படுத்த அரசின் அனுமதி வேண்டும் என்பதால் அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் பாலுராஜ், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரோன் தொடர்பான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருவதாகவும், உலகின் பல நாடுகளுக்கு சென்று பணியாற்றி வந்துள்ளதாகவும், வெளிநாடுகளை போல் நம் நாட்டிலும் மருந்து பொருட்களை விரைவாக கொண்டு செல்ல ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்காத மலைவாழ் கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் வகையிலும், ட்ரோன் உருவாக்கப்பட்டதாகவும், இந்த ட்ரோனில் மருந்து பொருட்களை விரைந்து கொண்டு செல்வதன் மூலம், மகப்பேறு மரணங்கள், பாம்பு தீண்டுவதால் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட பல உயிரிழப்புகள் தடுக்க முடியும் என தெரிவித்தார்.

இந்த ட்ரோன் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் 400 மீட்டர் உயரத்தில் செல்லும். 7 கிலோ வரை உள்ள மருந்து பொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியும். இதன் மொத்த எடை 25 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 1 மணி நேரம் பறந்து செல்லக்கூடிய வகையில் பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் பறக்க தேவையான செயற்கை கோள் மொபைல் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. வான் வெளியில் பறக்க அதற்கான தடையின்மை சான்றும் உள்ளன. இந்த ட்ரோனை பயன்படுத்த தமிழக அரசின் அனுமதி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் அனுமதி கிடைத்தால் பல ட்ரோன்களை உருவாக்கி அதனை வெற்றிகரமாக அதனை செயல்படுத்த முடியும் என கூறுகிறார் தினேஷ் பாலுராஜ்.

யாழி ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனத்தை சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே தொடங்கியுள்ளதாகவும், தனது ட்ரோனுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பை தஞ்சாவூரிலியே இருந்தவாறு உருவாக்கி தர முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தினேஷ் பாலுராஜ்.

Night
Day