2 நாள் பயணமாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

2024 மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழு,  2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளது. நேற்றிரவு 8 மணிக்கு சென்னை வந்தடைந்த அவர்களை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கருத்து கேட்க உள்ளார். பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். 

அதனைத் தொடர்ந்து நாளை, தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இதில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இறுதியாக தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ராஜீவ் குமார்  விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.

Night
Day