விவசாயி மரணம் - நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஹரியானா முதலமைச்சர் மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது.

வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் டெல்லி நோக்கி பேரணி போராட்டத்தில்  வடமாநில விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களை டெல்லி செல்ல விடாமல் எல்லையிலேயே ஹரியானா அரசு தடுப்புகள் அமைத்துள்ளதுடன் விவசாயிகள் மீது அம்மாநில போலீசார் தொடர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

இதில் நேற்று முன்தினம் கனவுரி எல்லையில் நேற்று போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே ஏற்பட்ட மோதலில் சுப் கரண் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். போலீசார் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக அகில இந்திய கிசான் சபா குற்றம் சாட்ட அதனை ஹரியானா போலீசார் மறுத்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் தோட்டாக் காயம் உள்ளதாக கூறியுள்ள பாட்டியாலா மருத்துவமனை மருத்துவர்கள், தோட்டாவின் அளவு போன்ற கூடுதல் விவரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றும் டெல்லிக்குள் நுழையும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்தநிலையில்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த மற்றும் தற்போதைய போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா இந்த விவகாரத்தில் களமிறங்கியுள்ளது. விவசாயிகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் 'கறுப்பு தினமாக' அனுசரிக்கப்படும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோரின் உருவபொம்மை எரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


வரும் 26-ம் தேதி விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவார்கள் என்றும், மார்ச் 14-ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அகில இந்திய கிசான் மஸ்தூர் மகா பஞ்சாயத்து கூடும் என்றும் கூறியுள்ளனர். அவர்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Night
Day