15 ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை கொடுமை... வேடிக்கை பார்க்கும் அரசு...

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் அருகே, தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்ததை தட்டிக்கேட்ட ஒரு குடும்பத்தை 15 ஆண்டுகளுக்கு மேலாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்... எத்தனை சீர்திருத்தவாதிகள் வந்தாலும் நாங்கள் திருந்த மாட்டோம் என பிடிவாதமாக இருக்கும் ஆதிக்க சிந்தனை கொண்டவர்களால் நிகழ்த்தப்பட்ட அராஜகம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகவயல் கிராமத்தில் காளிதாஸ் - முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்...

கடந்த 2007ஆம் ஆண்டு இத்தம்பதியினருக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சாலை அமைத்ததை காளிதாஸ் தட்டிக்கேட்டுள்ளார்...

இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சிந்தனை கொண்ட பெருச்சாளிகள், காளிதாஸ் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்...

கிராமத்தினர் யாராவது காளிதாஸ் குடும்பத்தினரிடம் பேசினால் 5 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிப்பதாக கூறப்படுகிறது....

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசிய முனீஸ்வரியின் மகளான திலகேஸ்வரி, குடிப்பதற்கு கூட ஊரணி தண்ணியை எடுத்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்...

பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி தீண்டாமை கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளதாக திலகேஸ்வரி குமுறியுள்ளார்...

100 நாள் பணிகளும் தனக்கு வழங்கப்படவில்லை என்ற திலகேஸ்வரி, கிராமத்தில் நடக்கும் அனைத்து காரியங்களிலும் தங்கள் குடும்பம் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்...

தங்கள் வயலில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து நல்ல பலனை தந்துள்ள நிலையில், அதை அறுவடை செய்ய விடாமல் தடுத்து கொடுமைப்படுத்துவதாகவும் திலகேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்...

தங்களுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை கொடுமை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய திலகேஸ்வரி, இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து அரசும், அதிகாரிகளும் தங்களை அனைத்து சமுதாய மக்களோடும் இணைந்து வாழ வழி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரியுள்ளார்...

Night
Day