விளம்பர அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்‍கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக்‍ கண்டித்து மின்வாரியத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாரிடம் தாரைக்‍கும் முடிவை கைவிட வேண்டும், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்‍கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். 

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் திருச்சி மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திமுக அரசுக்‍கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் பேசித்தீர்க்க முன்வராவிட்டால், மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்‍கை விடுத்தனர். 

தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், 300க்‍கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது தமிழக அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களை எழுப்பினர். 

வேலை பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்ட உத்தரவுகளை திரும்ப பெற வலியுறுத்தி, கோவை மாவட்டம் டாடாபாத்தில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்‍கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பணியிட மாறுதல் கோரும் கேங்மேன், கள உதவியாளர் உள்ளிட்டோருக்‍கு பணியிட மாற்றம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தேர்தலுக்கு முன்பு ஒரு வாக்குறுதியும், தேர்தல் பின்பாக அதனை மாற்றிப் பேசி வரும் திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


Night
Day