மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு...! கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆறு இரண்டாவது முறையாக மஞ்சள் நிறமாக மாறியுள்ளதால் அப்பகுதி மீனவ மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறுவதற்கான காரணம் என்ன? மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொசஸ்தலை ஆற்றை நம்பிதான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் 8க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் தொழில் நடத்தி வருகின்றனர். கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்கள், நண்டுகள், இறால்கள் கிடைக்கும் என்பதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமே இதனை நம்பித்தான் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொட்டித்தீர்த்த பேய் மழையால், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் திறக்கப்பட்ட உபரி நீருடன், மணலி தொழிற்சாலை ஆயில் கழிவுகளும் எண்ணூர் ஆற்றில் கலந்தன. இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பில் இருந்தே மீனவர்கள் தற்போது தான் மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை திடீரென எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மஞ்சள் நிறமாக மாறியுள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கொசஸ்தலை ஆறு முழுவதும் கழிவு நீர் கலந்து மஞ்சள் நிறத்தில் மாறியது. தற்போது மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் கழிவு நீர் கலந்து மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சுடுநீர், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளால், எண்ணூர் ஆறு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கடல்வளத்தை நம்பி பிழைப்பு நடத்தி வரும் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போயுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கடந்த முறை பாதிப்பின்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மாதிரிகளை சேகரித்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், தற்போது வரை கழிவுநீர் வெளியேற்றப்பட்ட நிறுவனம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் விரைந்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே மீனவ மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day