காங்கிரஸ் எம்.எல்.ஏ-விடம் வாக்குவாதம்... அடுத்த அரை மணிநேரத்தில் பாசமழை பொழிந்த திமுக நகராட்சி தலைவர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.விடம், மயிலாடுதுறை திமுக நகராட்சி தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அரை மணி நேரத்திலேயே திமுக நகராட்சி தலைவர், காங்கிரஸ் எம்எல்ஏவை புகழ்ந்து பாச மழையை பொழிவது போல் பேசியது தற்போது இணையத்தில் மீம்ஸாக வைரலாகி வருகிறது. 

மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டடத்தை ரூபாய் 4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது.

அதற்கான அடிக்கல் நாட்டுவிழா கல்லூரிக்கு பின்புறம் உள்ள இடத்தில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு வந்த திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான குண்டாமணி செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எம்.பி., நகராட்சி தலைவர், கவுன்சிலர் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எப்படி வேலையை தொடங்கலாம்? இந்த இடத்திற்கு நகராட்சியில் இன்னும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. இங்கே கட்டடம் எப்படி கட்டிடுவீற்கள் என கட்டட ஒப்பந்தக்காரர்களை வறுத்தெடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்.எல்.ஏ. ராஜகுமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், காங்கிரஸ் எம்எல்ஏவிடம், நீ தேர்தலில் ஜெயித்தது எப்படி.. திமுகவினரின் ஓட்டு வாங்கி தானே ஜெயிச்ச.. எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்த சம்பவத்தால் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் திரைப்படங்களில் வரும் அரசியல் காமெடி சீன்களை மிஞ்சும் அளவுக்கு அடுத்த அரை மணி நேரத்தில் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், மேடையில் பேசிய குண்டமணி செல்வராஜ் அன்பு அண்ணன் ராஜ்குமார் அவர்களே என்று பாசம் மழையாக பெய்ய பேசினார். அரை மணி நேரத்திற்கு முன்பு, வசை பாடிய வாயா இது என அவரது பேச்சு அனைவரையும் யோசிக்க வைத்தது.

 இதற்கிடையே, "அது வேற இது நாற வாய்". "அடிச்சான் பாரு பல்டி" "அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா' என்ற வசனங்களுடன் இந்த காட்சி மீம்ஸாக வெளியிட்டு தற்போது மயிலாடுதுறை பகுதியில் வைரலாகி வருகிறது.

Night
Day