மசோதாக்கள் ஒப்புதலுக்கு தாமதமா - ஆளுநர் மாளிகை விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் தாமதப்படுத்துவதாக ஆதாரமற்ற உண்மையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், அரசின் 81 சதவீத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை கிடப்பில் போட்டு, ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் தாமதப்படுத்துவதாகவும், அவருடைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும் பொதுவெளியில் சில ஆதாரமற்ற மற்றும் உண்மையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 31ம் தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதில் 95 சதவீத மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் இதில் 60 சதவீதம் மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மசோதாக்கள் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் பெறப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. 

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆளுநர் பரிசீலித்துள்ளார் என்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது உயரிய மரியாதையையும் மதிப்பையும் ஆளுநர் கொண்டுள்ளார் என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Night
Day