படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப்... உழைப்பிற்கு இலக்கணமாக திகழும் கல்லூரி மாணவிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஆட்டோ ஓட்டுநராக பகுதி நேர தொழில் செய்து, தனது வருவாயை ஈட்டி, தன்னம்பிக்கை ஊட்டும் மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆட்டோ சவாரியில் களத்தில் கலக்கும் கல்லூரி மாணவிகளின் ஓட்டுநர் பணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் ஆணுக்குப் பெண் இளைப்பவர்கள் இல்லை என்ற கூற்றை மெய்யாக்கும் வகையில், புரட்சித்தலைவி அம்மா, விண்வெளி விஞ்ஞானி கல்பனா சாவ்லா, அன்னை தெரேசா, நைட்டிங்கேல் அம்மையார் என பலரும் பல்வேறு துறைகளில் மகத்தான சாதனையை புரிந்துள்ளனர். தற்போதும் பெண்கள் பலரும் அறிவியல் யுகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

அதன் ஒருபகுதியாக திருச்சியில், கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்களது குடும்ப தேவைக்காகவும், தங்களது சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாகவும், ஆட்டோ ஓட்டுநராக பயணத்தை தொடங்கி உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கல்லூரி மாணவர்கள் பலரும் படிக்கும் போதே பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டு, அதன் மூலம் வரும் வருமானத்தில் தங்களது கல்விக்கு தேவையானவற்றை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

அதேபோன்று கல்லூரியில் பயிலும் பெண்கள் பலரும் பகுதி நேரமாக அங்காடி, செல்போன் விற்பனை மையங்கள், கணினி சேவை மையங்களில் பணியாற்றி வருகின்றனர். பெற்றோர்களும் தங்களது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வேறு எங்கும் வேலைக்கு அனுப்ப தயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் "ஊர் கேப்ஸ்" என்ற எலக்ட்ரானிக் ஆட்டோவை கேப்ஸில் இணைத்து ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரசு வேலையை எதிர்பார்த்து காத்திராமல், பாதுகாப்பான சூழலுடன் பணியாற்ற இந்த பணி நிச்சயமாக பயனுள்ளதாக அமையும் என்றும், பெண்களை பகலில் மட்டுமே பணியமர்த்துவதாகவும், அதனால் நிச்சயம் பெண்களுக்கு ஒரு உறுதுணையாக இந்த கேப்ஸ் ஓட்டுநர் பணி அமையும் என அதன் நிறுவனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.

எல்.பி.ஜி. ஆட்டோவை இயக்க பயமாக இருந்ததாகவும், தற்போது எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுவது சுலபமாக உள்ளது என ஊர் கேப்ஸில் ஓட்டுநராக பணியாற்றி வரும் பி.ஏ. ஆங்கிலம் பயின்று வரும் மாணவி பிரஜிதா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் முன்னுரிமை அளித்ததால் பெண்கள், பெண் குழந்தைகள் என அனைவரும் துணிச்சலாக ஆட்டோ சவாரிக்கு வருகிறார்கள் என்றும், சவாரி இல்லாத நேரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு படிப்பதால் படிப்பும் பாதிக்கப்படவில்லை என மாணவி பிரஜிதா கூறுகிறார்.

மற்றொரு கல்லூரி மாணவியான கேத்தரின், பகுதி நேர வேலையை விரும்புவர்கள் இந்த வேலையை தேர்வு செய்யலாம் என்றும், குடும்பத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் நிச்சயம் இதுபோன்ற கேப்ஸ் வேலையை தேர்வு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிடைத்த நேரத்தில் இது போன்ற பகுதி நேர தொழில் செய்து வருவாயை ஈட்டி, தன்னம்பிக்கை ஊட்டும் மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Night
Day