கந்தர்வகோட்டையில் முழு கடையடைப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கந்தர்வக்கோட்டையில் தனியார் உயிரி மருத்துவக்கழிவு தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிசானத்தூர் கிராமத்தில் அமையவிருக்கும் தனியார் உயிரி மருத்துவக்கழிவு தொழிற்சாலைக்கு எதிராக கடந்த 32 நாட்களாக அக்கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆதரவளித்து வருகின்றன. போராட்டத்தை கைவிட கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உயிரி மருத்துவ கழிவு தொழிற்சாலை அமைக்கப்பட மாட்டாது என்று அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே  போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறிய பிசானத்தூர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

இந்நிலையில்  பிசானத்தூர் கிராம மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கந்தர்வகோட்டை வர்த்தக சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு நடத்தப்பட்டு வருகின்றது. சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பால், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

Night
Day