தென்காசி கோர விபத்து - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தென்காசி மாவட்டம் இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் இதுவரை 5 பெண்கள் உள்பட 8 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழை, எளிய, சாமானிய மக்கள்தான் பேருந்துகளில் அதிகம் பயணிக்கின்றனர் என்றும் பேருந்துகளில் பயணிக்கின்ற பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். 

8 உயிர்களை பறித்துள்ள இரு தனியார் பேருந்துகளையும் அதிவேகமாக இயக்கியதால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன - எனவே, தனியார் பேருந்து நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும், கவனமுடனும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தியுள்ளார்.

பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுனர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்பதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை விரைந்து கண்டறிந்து மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னார்களது ஆன்மா  இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day