'டிச. 4ம் தேதிக்குள் SIR படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டும்' - அர்ச்சனா பட்நாயக்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 யாருடைய பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்போவதில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு வரும் 4 ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில் 6 கோடியே 16 லட்சம் வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும்  பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஐம்பது விழுக்காடு வரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது என்று கூறிய அர்ச்சனா பட்நாயக், 68 ஆயிரத்து 647 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உட்பட மொத்தம் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ஊழியர்கள் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அர்ச்சனா பட்நாயக், நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஸ் ஐ ஆர் பணியில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னையில் 96 விழுக்காடு அளவில் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் வாயிலாக 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அர்ச்சனா பட்நாயக், SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு வரும் 4 ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Night
Day