நிற்காமல் சென்ற மாநகர பேருந்து... பறிதவித்த மாற்றுத்திறனாளி... தட்டிக்கேட்டவரை வசைபாடிய நடத்துநர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் மாநகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் பார்வைமாற்றுத்திறனாளியை அலைக்கழிக்க செய்துள்ளனர்.  இதனை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை நடத்துநர் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியது பயணிகளை கோபம் அடைய வைத்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாண்மையானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் அரசு பேருந்தையே நம்பி உள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கும்போது, பல சமயங்களில் அரசு பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில நிற்காமல் சற்று தள்ளி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்துவருவது தொடர் கதையாக உள்ளது. 

இதேபோன்ற ஒரு சம்பவம் தான் சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்துள்ளது. கல்லறை பேருந்து நிறுத்தத்தில் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது, திருவொற்றியூர்-பூந்தமல்லி மார்கத்தில் இயக்கப்படும் தடம் எண் 101- கொண்ட பேருந்து ஒன்று அந்த வழியாக வந்தது. அப்போது, மாற்றுத்திறனாளி அருகில் இருந்தவர் ஒருவரின் உதவியோடு அந்த பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். 

ஆனால் மாற்றுதிறனாளி என்ற கருணைகூட இல்லாமல் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி என்ன செய்வது என தெரியாமல் தவித்துள்ளார். 

இதனை கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, இரண்டு கிலோ மீட்டர் வரை சென்று, அந்த மாநகர பேருந்தை மடக்கி நிறுத்தினார். பின்னர் ஏன் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றீர்கள்.. உங்களுக்கு மனிதாபிமானம் என்பது கிடையாதா? என கேட்டுள்ளார். கடும் வெயிலில் காத்துகிடக்கும் மாற்றுத்திறனாளியை பேருந்தில் ஏற்றாமல் சென்றது நியாயமா எனக் கேட்டார். அப்போது, மாநகர பேருந்தின் ஓட்டுனர், பேருந்தை நிறுத்தாமல் சென்றதை நியாயப்படுத்தி சமூக ஆர்வலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடந்தவற்றை அவர் செல்போனில் பதிவு செய்ய, ஆத்திரமடைந்த மாநகர பேருந்து நடத்துனர், சமூக ஆர்வலரை தரக்குறைவாக பேசியதோடு, ஆபாச வார்த்தைகளால், கடுமையாக சாடினார். இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன...

மக்களுக்கு சேவை வழங்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளோம் என்பதை மறந்து அரசு ஊழியர் என்ற மமதையில், அரசு பேருந்து ஓட்டுனர்கள் சிலர், அதிகாரம் செய்வதையும், பல சமயங்களில் மனிதாபிமானமற்ற முறையில்  நடந்து கொள்வதையும் அடிக்கடி காண முடிகின்றது. எனவே, இதுபோன்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day