நடுவீட்டில் அமர்ந்து மானக்கேடாக கேள்வி... உயிரைப் பறித்த கடன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே ஒரு மாத தவணையை கட்டாததால், தனியார் வங்கி ஊழியர்கள் நடத்திய வெறியாட்டத்தில் அவமானம் அடைந்து நபர் தற்கொலை செய்து கொண்டார்... நாகூசும் வார்த்தைகளால் வசை பாடிய உஜ்ஜீவன் வங்கி ரவுடி ஊழியர்களின் அராஜகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கன்னியாகுமரி அருகே உள்ள மந்தாரம் புதூரில் செல்வன் - ராதிகா தம்பதியர் வசித்து வந்தனர்...

தங்களது குடும்ப தேவைக்காக செல்வனின் மனைவி ராதிகா, வடசேரியில் உள்ள உஜ்ஜீவன் என்ற தனியார் சிறு கடன் வங்கியில், 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்...

இந்த கடன் தொகையை மாதம் 4ஆயிரத்து 687 என்ற விகிதத்தில் 24 மாத தவணையில் கட்ட ஒப்புக்கொண்ட ராதிகா, மாதம் தோறும் தவணை தொகையை குறிப்பிட்ட நாளில் செலுத்தி வந்துள்ளார்...

ஆனால் ராதிகாவின் குழந்தைகளுக்கு உடல்நல பிரச்னை  ஏற்பட்டதால் மருத்துவ செலவுக்கு கையிருப்பு கரைந்த நிலையில், பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கட்டவேண்டிய தவணை தொகையை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார் ராதிகா...

4ஆயிரத்து 687 ரூபாய் கட்டமுடியாமல் தம்பதி தவித்து வந்த நிலையில், உஜ்ஜீவன் வங்கியின் ரவுடி ஊழியர்கள் ராதிகாவின் வீட்டிற்கு சென்று கடன் தொகை எங்கே என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளனர்...

அப்போது குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக பணம் செலவழிந்து விட்டதாக கூறிய ராதிகா, ஓரிரு நாளில் பணத்தை கட்டி விடுகிறேன் எனக்கூறி உள்ளார்...

ராதிகாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த உஜ்ஜீவன் ரவுடி பாய்ஸ், வங்கியில் இருந்து பணம் வாங்கி சாப்பிடும் போது நன்றாக இருந்தது, அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் எதற்கு கடன் வாங்குகிறாய் என ஒருமையில் பேசியுள்ளனர்...

பிச்சை எடுத்தாவது வாங்கிய கடனை கொடு என பெண் என்றும் பாராமல் பேசிய உஜ்ஜீவன் ரவுடி பாய்ஸ், வீட்டின் நடுப்பகுதியில் அமர்ந்து பணத்தை கொடுத்தால் தான் வீட்டை விட்டு வெளியே போவோம் என மிரட்டியுள்ளனர்...

ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவதே தவறு என்ற சிந்தனையில்லாத ரவுடி பாய்ஸ், தொடர்ந்து அநாகரீகமாக பேச தொடங்க, தனது கணவரை செல்போனில் அழைத்து கதறியுள்ளார்...

உடனே வீட்டிற்கு ராதிகாவின் கணவர் வர, வீட்டிற்குள் உட்கார்ந்திருந்த வங்கி ஊழியர்களிடம், ஓரிரு நாளில் பணத்தை கட்டி விடுகிறேன் எனக் கூறியுள்ளார்...

அப்போது வாங்கிய பணத்தை கட்ட முடியாத, நீ எல்லாம் ஆண்மகனாக ஏன் நடமாடுகிறாய் என கேட்ட ரவுடி பாய்ஸ், உனக்கு எதற்கு ஒரு குடும்பம் என கீழ்த்தரமாக பேசியுள்ளனர்...

கணவரிடம் உஜ்ஜீவன் ரவுடி பாய்ஸ் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது, பள்ளிக்கு சென்ற குழந்தைகளை அழைத்து வர ராதிகா சென்றுள்ளார்...

உஜ்ஜீவன் ரவுடி பாய்ஸ் தொடர்ந்து வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு சரமாரியாக வசை பாடிய நிலையில், வீட்டின் படுக்கையறைக்கு சென்ற செல்வன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்...

பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்த ராதிகா, கணவரை தேடி படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதுள்ளார்...

இதை கண்ட உஜ்ஜீவன் ரவுடி பாய்ஸ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்... ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கிய செல்வனின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...

அங்கு செல்வனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து செல்வனின் உடல் உடற்கூர் ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது...

இதனிடையே உஜ்ஜீவன் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  செல்வனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி கடன் வசூலில் அராஜகம் கூடாது என நீதிமன்றங்களும், மத்திய அரசும் பலமுறை கூறிய போதும், தனியார் வங்கிகளின் ரவுடி பாய்ஸ்களை தொடர்ந்து கடன் வசூலில் களமிறக்கி வருகின்றனர்... அப்படிப்பட்ட ரவுடி பாய்ஸ்களை குண்டாசில் கைது செய்வதுடன், ரவுடி பாய்சை வேலையில் சேர்க்கும் வங்கி மேலாளர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது...

Night
Day