ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்... அத்துமீறும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

நிலப்பிரச்னை தொடர்பான வழக்கை வாபஸ் பெறாத காரணத்தால், ஒரு குடும்பத்தை, திமுக ஊராட்சி மன்ற தலைவர், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் அத்துமீறல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக். அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள நிலம், பல தலைமுறைகளாக அசோக் குடும்பத்தினர் வசம் இருந்து வந்தது. 

இந்தநிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து வந்த நிலையில், அந்த இடத்தை உரிமையாளரிடம் இருந்து தனியார் அறக்கட்டளை  வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தரங்கம்பாடி நீதிமன்றத்தில் அசோக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே, அசோக் குடும்பத்தினர் வசம் உள்ள நிலத்தில் இருந்த வேப்ப மரங்களை பிடுங்கி, ஜே.சி.பி. இயந்திரம் மூலம், நிலத்தை சமன் செய்யும் பணிகளில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

நிலப் பிரச்னையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அசோக் குடும்பத்தினரை, திமுக ஊராட்சி மன்ற தலைவரின் தூண்டுதலின்பேரில், கிராம மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, திமுக ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அசோக்கின் வழக்கறிஞர் சங்கமித்ரன், மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் அத்துமீறலால், அசோக்கின் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், உடல் நலக்குறைவால் உயிரிழந்த அசோக்கின் தாயாரின் உடலைக் கூட, அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய அனுமிக்கவில்லை எனவும் வழக்கறிஞர் சங்கமித்ரன் குற்றத்சாட்டியுள்ளார்.

வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே ஊருக்குள் சேர்க்க முடியும் என தெரிவித்து வரும் நிலையில், அசோக் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்ற தலைவர் சந்திர மோகன் தலைமையிலான குழுவினர் மீது காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துமீறி பொக்லைன் இயந்திரத்தை வைத்து நிலத்தை சமன் செய்யும் பணிகளில் ஈடுபடும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

விளம்பர திமுக ஆட்சியில், நிலம் அபகரிப்பு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day