தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்தார் அன்புமணி

எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக நிறுவனர் ராமதாஸை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பால் தந்தை-மகன் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வருமா? என பாமக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது. பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் தாமே தலைவர் என அன்புமணி செயல்பட்டு வந்தார். இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அன்புமணி சந்தித்துள்ளார். சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு தனது மகளுடன் சென்ற அன்புமணி, தந்தை ராமதாஸ் மற்றும் தாயார் சரஸ்வதியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பால் தந்தை-மகன் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வருமா? என பாமக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Night
Day