திருமணத்தில் அரைசதம் கடந்த சத்யா.. 52ல் அவுட்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆன்லைன் திருமண செயலி மூலம் பல இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி, 52 ஆண்களை இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீஸ் முதல் பைனான்சியர் வரை ஏமாற்றி திருமணம் செய்த அந்த கில்லாடி பெண் யார்... விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். இவருக்கு திருமணம் நடத்தி வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு அன்பே என்ற ஆன்லைன் திருமண செயலி மூலம், ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண் மகேஷ் அரவிந்திற்கு அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு வீட்டிற்கு தெரியாமல் அரவிந்தும், சத்யாவும் பழனிக்கு சென்று திருமணம் செய்துள்ளனர். இதை அறிந்த மகேஷ் அரவிந்த்தின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்து வரவேற்றதுடன், சத்யாவுக்கு தேவையான நகை மற்றும் புடவைகள் வாங்கிக் கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். திருமணமாகி 2 நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் மகேஷ் அரவிந்த்தின் பெற்றோர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள சத்யாவின் பெற்றோரிடம் பேசி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்தனர். அதன்படி மகேஷ் அரவிந்தின் பெற்றோர் கொடுமுடி சென்று தனது மருமகள் சத்யா குறித்து விசாரித்தனர். அங்கு அவர்களுக்கு கிடைத்த தகவல் அவர்களை திக்கு-முக்காட செய்தது. சத்யா பல ஆண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து கொண்டதும், பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

ஒவ்வொருவரையும் திருமணம் செய்து அவர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து விட்டு, வீட்டில் இருக்கும், நகை, பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் சத்யா. மகேஷின் வீட்டிலும் திருடுவதற்காக சரியான நேரம் பார்த்து சத்யா காத்திருந்த நிலையில், அதற்குள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர் இதுகுறித்து சத்யாவிடம் விசாரித்த போது, அவர்களை சத்யா மிரட்டியுள்ளார். 

இதனால் உஷாரான அவர்கள் சமாதானம் செய்வது போல் சாதுர்யமாக பேசி, மகளிர் காவல் நிலையத்திற்கு சத்யாவை அழைத்துச் சென்றனர். தன்னை சிக்க வைப்பதற்காக காவல் நிலையம் அழைத்து வந்திருப்பதை அறிந்து கொண்ட சத்யா அங்கிருந்து நைசாக நழுவி தப்பி சென்றுள்ளார். 

இது தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் போலீசாரே அதிரும் அளவிற்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருண், கரூரைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ் என்பவரையும் ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. 

அதுமட்டுமல்லாமல் கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ததில் சத்யாவுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும், சத்யாவின் திருமணத்திற்கு தமிழ்ச்செல்வி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது.

அத்துடன் திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இளைஞர்களை சத்யா திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழ்ச்செல்வி, சத்யா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Night
Day