எழுத்தின் அளவு: அ+ அ- அ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. அதிகவிலைக்கு ஆடுகள் விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளுடன் சந்தையில் குவிந்தனர். 2 ஆயிரம் ஆடுகள் வரை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் செம்பு கிடா ஆடு 35 ஆயிரம் ரூபாய்க்கும், சண்ட கிடா 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று பிற ஆடுகளும் கணிசமான விலைக்கு விற்பனையாகின. சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில் ஆட்டுச் சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சங்கரன்கோவில், சுரண்டை, சிவகிரி, உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஆடுகளை வாங்க குவிந்தனர். சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும், சுமார் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. சந்தையில் ஏராளமான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடு ஒன்று 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால் வியாபாரிகள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் சங்கராபுரம் - திருக்கோவிலூர் செல்லும் சாலையிலேயே வாரச்சந்தை நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டு வியாபாரிகள் கடும் அவதியுற்றனர்.